தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 13-வது சட்டப்பேரவையின் 10வது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் உள்பட 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இம்மாதம் 30ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடரை நடத்துவது என அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்துள்ளது என்றார்.
நாளை (22ஆம் தேதி) முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்த அவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, சதாசிவம், பிரணவநாதன், ஆர்.கே.பெருமாள், விருதுநகர் பெ.சீனிவாசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்படும் என்றார்.
23ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கும் என்றும் 24, 25, 26 ஆகிய 3 நாட்களும் விடுமுறை என்பதால் 27, 28, 29 ஆகிய நாட்களில் விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 30ஆம் தேதியும் விவாதம் நடத்தப்பட்டு அதற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார். 22ஆம் தேதியும், 30ஆம் தேதியும் கேள்வி நேரம் கிடையாது. இதுவரை அரசு தரப்பில் இருந்து எந்த மசோதாவும் வரவில்லை. அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்ட மசோதா கொண்டு வர வாய்ப்புள்ளது என்று அவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள், செல்வப்பெருந்தகையின் ராஜினாமா தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? கேட்டதற்கு, 1986ம் வருட கட்சி மாறினால் தகுதியிழப்பு விதியின் அடிப்படையில் செல்வப் பெருந்தகையை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தம்பிதுரை கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மனு ஒன்றை கொடுத்தார். இதன் அடிப்படையில் 7 நாட்களில் விளக்கம் தருமாறு செல்வப்பெருந்தகைக்கு மனுவின் நகலை இணைத்து மறுநாள் (17ம் தேதி) கடிதம் அனுப்பப்பட்டது.
அவரிடமிருந்து எந்த விளக்கமும் வராததால் மீண்டும் அதே மாதம் 26ஆம் தேதி அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. போதுமான காரணங்களுக்காக கூடுதல் அவகாசம் தரலாம் என்ற விதி இருப்பதால் இந்த பிரச்சனை தற்போது என்னுடைய ஆய்வில் உள்ளது. இதற்கு காலக்கெடு எதுவும் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் கருத்தை அறிய வேண்டியது அவசியம் என்பதால் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஒரு காலக்கட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். திருமங்கலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லதா அதியமான் பதவியேற்பு தொடர்பாக இதுவரை தகவல் இல்லை என்றார்.
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் அவைத் தலைவர் என்ற முறையில் இதில் சட்டப்படி நீங்கள் மேல் நடவடிக்கை எடுப்பீர்களா? என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஆவுடையப்பன், ஒட்டுமொத்தமாக பேரவை முடிவெடுத்து மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்துகிற வகையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இதன் மீது மேல் நடவடிக்கை ஏன் இல்லை என்று பேரவைதான் தீர்மானிக்க வேண்டும். இதில் அவைத் தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றார்.