மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்திருப்பதன் மூலம் முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு தமிழக அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைத்துப் மாநில ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பேசுகையில், கடந்த காலத்தில் மதுவிலக்குக் கொள்கையில் நமது மாநிலம் உறுதியுடன் செயல்பட்ட போதிலும், நன்மையிலும் தீமை உண்டு என்பதுபோல கள்ளச் சாராயம் கடலெனப் பெருகியும், விஷச் சாராயச் சாவுகள் நூற்றுக் கணக்கில் தொடர்ந்தும், கேடு விளைந்த நிலையில், மறு ஆய்வு செய்து 1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு தளர்த்தப்படவும் அதற்குப் பின் நடைபெற்ற ஆட்சிகளிலும் அதே நிலை தொடர்ந்து வருகின்ற சூழலில்,
பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், ஆன்மீகவாதிகள் எனச் சான்றோர் பலரும் கடந்த மாதம் 22 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
அவர்கள் கூறியதில் ஒத்த கருத்துடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு, கடந்த இரண்டாண்டுகளில் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களை (பார்) மூடியுள்ளது என்பதையும், அதே போல் 128 சில்லறை மது விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதையும் நினைவூட்டி, தொடர்ந்து படிப்படியாக முழு மதுவிலக்கினை எடீநுதிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும்; அதுவரையில் ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள், கல்வி நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் விதிமுறைகளுக்கு மாறாக மதுக்கடைகள் அமையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவெடுத்துள்ளது.
மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருந்ததில், 1 மணி நேரத்தைக் குறைத்து - 2009 ஜனவரி 1 ஆம் தேதி முதல், காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரையில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்து அதற்கிணங்க ஆணையும் பிறப்பித்துள்ளது. முழு மதுவிலக்கைக் கொண்டு வருவதற்கான எண்ணத்தோடு இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கான சான்றுகள் தான் இவை என்று ஆளுநர் பர்னாலா தமது உரையில் தெரிவித்துள்ளார்.