Publish Date: Wed, 21 Jan 2009 (13:34 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (13:32 IST)
இந்தாண்டு நடந்த முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆற்றிய உரையின் முழு விவரம் வருமாறு :
* மக்களாட்சி மாண்புக்கு எதிராக பயங்கரவாதம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தலையெடுத்திடும் போதிலும் - இந்தியத் திருநாட்டின் அளவில், தலைநகர் டில்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கார், மிசோராம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதையும், அவற்றைத் தொடர்ந்து திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் வலிமை உணர்த்தப்பட்டதையும் பெருமையாகக் அரசு கருதுகிறது.
* பயங்கரவாதச் செயல்கள் குறித்து விரைவாகப் புலன்விசாரணை செய்து முடித்து, அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை கிடைத்திடுவதை உறுதிசெய்யும் நோக்கில், தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்தை வரவேற்கும் அதே வேளையில், மாநில அரசின் அதிகாரங்களில் குறுக்கிடாமலும், தனி நபர் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் இந்த அமைப்பு செயல்பட வேண்டும்.
* இலங்கையில் நடைபெறும் போர், பிரச்சனையைத் தீர்க்க உதவாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிற நமது இந்தியப் பேரரசு, பேச்சுவார்த்தை போன்ற உரிய வழிமுறை வாயிலாக, அந்த நாட்டில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை இனியும் காலந்தாத்தாது மேற்கொண்டு நாளும் வதைபடும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ளவரின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. தாயகம் திரும்ப இயலாது, தொடர்ந்து அகதிகளாக வாழ நேரிட்டுள்ள இவர்களது தங்குமிடங்களின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்த அரசு ஆவன செய்யும்.
* தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தமிழ் நிலத்துப் பேரறிவாளர்களும் பொறியாளர்களும் பெரிதும் விரும்பியதும் - வருங்கால வளமிகு தமிழகத்தை உருவாக்கக் கூடியதுமான - பெருந்திட்டமாம் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில் - குறுக்கிடுகின்ற சிக்கல்களைக் களைந்து, வாணிபத் தொடர்பு பெருகி, பொருளாதாரத் துறையில் இந்நாடு புத்தெழுச்சி பெறத் தேவையான இந்தப் பெரும்பணியினை மத்திய அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
* 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சேதத்தில் உயிரிழந்த 205 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 4 கோடியே 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
* 2008இல் குடிசைகள் இழப்புக்காக 231 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குச் சிறப்பு நிவாரண உதவியாக 12 மாவட்டங்களில் மட்டும் 402 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தடுப்பதற்காக, ரூபாய் 211 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புரப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதற்காக ரூபாய் 1,560 கோடி மதிப்பீட்டிலான பெரும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, அண்மையில் ரூபாய் 690 கோடி 10 மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும்.
* சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு, குவிண்டால் ஒன்றுக்கு முறையே ரூபாய் 850 மற்றும் ரூபாய் 880 என மத்திய அரசு கொள்முதல் விலையை நிர்ணயித்துள்ள போதிலும்; விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலைக்குக் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கி, சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு முறையே ரூபாய் 1,000 மற்றும் ரூபாய் 1,050 என இந்த அரசு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருகிறது. நடப்பாண்டில் 16.5 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும்.
* கரும்பு கொள்முதல் விலையை, 811.80 ரூபாய் என்ற அளவிலிருந்து, இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தாத போதும், விவசாயிகளின் நலன் கருதி கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூபாய் 1,050-ஆக இந்த அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், ரூபாய் 1,100 என மேலும் உயர்த்த இந்த அரசு முடிவு செய்துள்ளது.
* இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இதுவரை 54,28,204 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நான்காவது கட்டமாக 41,62,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு நடப்பாண்டில் தொடர்ந்து வழங்கப்படும்.
* நிலத்தடி நீரில் ஃப்ளோரைடு அதிகம் உள்ள தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான ரூபாய் 616 கோடி மதிப்பீட்டிலான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணிகள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும்.
* தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தி, அனைத்து மாணவர்களும் தரமான சமச்சீர் கல்வியைப் பெற இந்த அரசு ஆவன செய்யும்.
* சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவையை நிறைவு செய்திட, சாலைகளில் அதிகரித்துவரும் நெரிசலைக் குறைக்கக் கூடிய ரூபாய் 14,600 கோடி மதிப்பீட்டிலான 'மெட்ரோ ரயில்' திட்டப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கும். மேலும், இந்தத் திட்டத்தில் திருவொற்றியூரும் இணைக்கப்பட வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், இதற்கான விரிவான ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்படும்.
* மனவளர்ச்சி குன்றியோருக்கு வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறையின்றி மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 500 தொடர்ந்து வழங்கப்படும்.
* அருந்ததியர்க்கு 3 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவில் நடைமுறைப்படுத்தி, மனிதக்கழிவை தலையில் சுமந்த மனிதர்களது தலைவிதியை மாற்றியமைத்து, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களின் சமூகப்பொருளாதார முன்னேற்றத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவும் இந்த அரசு ஆவன செய்யும்.
* இந்து, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆதிதிராவிடர்களுக்கு இணையாக; கிறித்தவ மதத்தைச் சார்ந்த ஆதிதிராவிடர்களையும் அட்டவணைப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
* பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தினருக்கு தேசிய அளவிலும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஆணையம் செய்துள்ள பரிந்துரையினைப் பரிசீலனை செய்து, உரிய அறிவிப்பினை வெளியிட வேண்டுமென்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.