இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கோஷங்கள் எழுப்பினர்.
சென்னையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர்.
கோவையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் மாணவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
துறையூரில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட தமிழகம் முழுவதும் இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு தங்களது எதிர்ப்புகளை காட்டினர்.