குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரை சாலையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26ஆம் தேதி காமராஜர் சாலையில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்கரை சாலையில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். இதனை முன்னிட்டு வருகிற 26ஆம் தேதி மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நடக்கும். 19ஆம் (இன்று) 22 மற்றும் 24ஆம் தேதி ஆகிய 4 தினங்களும் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்களில் காலை 6 மணி முதல் விழா முடியும் வரை அனுமதி அட்டை வைத்திருக்கும் வாகனங்கள் தவிர, இதர வாகனங்கள் காமராஜர் சாலையில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து போர் நினைவு சின்னம் வரையிலும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டாக்டர் நடேசன் ரோடு சந்திப்பு முதல் காந்தி சிலை சந்திப்பு வரையிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வடசென்னையில் இருந்து மைலாப்பூர் மற்றும் அடையாறு மார்க்கமாக செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை, பட்டுல்லாஸ் சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை பாயிண்ட், ராயப்பேட்டை மேம்பாலம் மற்றும் ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்றடையலாம்.
இதே போல், தென் சென்னையில் இருந்து வடசென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அடையாறு, மைலாப்பூர் வழியாக ஆர்.கே. மடம் சாலை, ராயப்பேட்டை மேம்பாலம், ராயப்பேட்டை முதல் பாயிண்ட், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிகூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக சென்றடையலாம்.
மஞ்சள் நிற அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தடய அறிவியல் அலுவலக வளாகத்திலும், பிங்க் நிற அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் ராணி மேரி கல்லூரி வளாகத்திலும், நீலநிற அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் கடற்கரை சாலையிலும் நிறுத்தலாம்.
அனுமதி அட்டை இல்லாமல் வரும் வாகனங்கள் தேசிய சாரண, சாரணீயர் பள்ளி வளாகம், கடற்கரை சாலை, சீரணி அரங்கம் எதிரிலும் நிறுத்தலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.