ஈழத்தமிழர் துயர் நீங்கவும்: தலைவர்கள் பொங்கல் வாழ்த்து
ஈழத்தமிழர் துயர் நீங்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனை அகலவும், தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கவும் விடியல் பூக்கவும் இயற்கைத்தாய் அருள் வழங்கிட இத் தைத் திருநாளில் வேண்டிக்கொள்வோம் என்று தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் : ஏகாதிபத்திய சார்பு நிலை, வகுப்புவாத பயங்கரவாதப் பேரழிவு சக்திகள், நாட்டையும் மக்களையும் நாசப்படுத்தும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இவற்றைப் பின்பற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகிய இரண்டையும் புறந்தள்ளி ஒரு புதிய மாற்றத்தை நிறுவ இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு : நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் பெருகி, மத, இன, நல்லிணக்கம் மிளிர்ந்து, தேசிய ஒற்றுமை உணர்வு உயர்ந்து தீவிரவாதம் அழிந்து அனைத்து மக்களின் வாழ்வும் சிறந்து விளங்கிட இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் : வறுமை நீங்கி வளம் பெருகவும், இருள் நீங்கி ஒளிபெறவும், மனித நேயம் மலர்ந்திடவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைந்திடவும் எனது மனம் நிறைந்த பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ : ஈழத்தமிழர் துயர் நீங்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனை அகலவும், தமிழ்க் குலத்தைப் பாதுகாக்கவும் விடியல் பூக்கவும் இயற்கைத்தாய் அருள் வழங்கிட இத்தைத் திருநாளில் வேண்டிக்கொள்வோம்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் : பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்கு உரிய நாள். புதுப்பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள். இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புதுக்கரும்பு, புது மஞ்சள், புத்தாடை போன்றவற்றை கடந்த ஆண்டைப் போலவே நம்முடைய கழகத் தோழர்கள் தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.ஒரு நல்ல ஆட்சியில் தான் அமைதியிருக்கும். அப்பொழுது தான் மக்கள் விழாக் கொண்டாட முடியும். உதாரணத்திற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் சிங்கள வெறியர்களின் ஆட்சியில் சிக்கித்தவிப்பதால் அவர்கள் எதிர் நோக்கியிருப்பது மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல. இரத்தப் பொங்கல் தான். இருவேறு இன மக்கள் ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழலாம்.இல்லையென்றால் அந்நிலப் பகுதியை பிரித்துக் கொண்டு அமைதியாக வாழலாம். இதைத்தான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் உலகம் அறிவுரையாக வழங்குகிறது. ஆனால் இலங்கையிலோ, இந்த அறிவுரையை இந்தியா கூட ஏற்காதது, தமிழ் மக்களின் சாபக்கேடு தான்.கொழுத்த யானை தான். இருந்தாலும் மதம் பிடித்து விட்டது. வந்த இடமோ செந்நெல்லும், வாழையும், செங்கரும்பும் விளைந்துள்ள பூமி. என்னாகும் அந்த விளைநிலம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதைப் பட்டத்து யானையாக்குவேன் என்பதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு உண்டோ? இன்று தமிழ்நாட்டின் அரசியல்நிலை யானைக் காலில் மிதிப்பட்ட விளைநிலம் போல் ஆகிவிட்டது. இதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சூளுரை மேற்கொள்வோம்.பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும் நல்வாழ்வு பெற்றிடவும், அமைதியும், முன்னேற்றமும் தரும் நல்லாட்சி ஏற்படவும், இப்பொங்கல் புதுநாள் தமிழ்நாட்டிற்கு வழிவகுக்கட்டும் என்று தே.மு.தி.க சார்பில் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார் : சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று பகுத்துண்டு வாழும் பண்பு உலகெலாம் பரவ வாழ்த்துக்கள்.
இதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.