தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளைத் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் உவகை பொங்கிடக்கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள தமிழ்புத்தாண்டு-பொங்கல் வாழ்த்து செய்தியில், தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டு-பொங்கல் திருநாளாக இந்த ஆண்டு முதல் கொண்டாடிடும் இனிய தமிழ்ச் சமுதாய மக்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச்சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப்பொங்கல் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவுடன் 1921-ம் ஆண்டின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர் பெருமக்கள் கூடி முடிவு செய்து அறிவித்தபடி தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள் எனச் சட்டமியற்றப்பட்டு, இந்த ஆண்டின் பொங்கல் திருநாள் முதன் முதலாகச் தமிழ்புத்தாண்டு- பொங்கல் திருநாளாக மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன. குறிப்பாக உணவுப்பொருள்களை விளைவித்து உலகத்தார்க்கு அச்சாணியாகத் திகழும் உழவர் பெருமக்கள் உயர்ந்திட கூட்டுறவு விவசாயக்கடன் தள்ளுபடி புதிய பயிர்க்கடன்களுக்கு வட்டி விகிதம் 9 விழுக்காடு என்பது 4 விழுக்காடாகக் குறைப்பு, கரும்புக்கும் நெல்லுக்கும் கூடுதல் விலைகள் பயிர்க் காப்பீடு திட்டம், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம், விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனப் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
நாமக்கல் கவிஞரின் வழியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் அறிவுறுத்திய நெறியில் தமிழ் மொழி, இன, பண்பாட்டு உணர்வுகளைப் போற்றி வளர்த்திடும் விழைவோடு பூம்புகாரில் சிலப்பதிகாரச்சிற்பக் கலைக்கூடம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், கொல்லி மலையில் வல்வில் ஓரி சிலை, குமரிமுனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலை என்றெல்லாம் அமைத்துள்ளோம். வரலாறு படைத்துள்ள தமிழறிஞர்களுக்கும், தமிழ் மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் தமிழகம் முழுவதும் திருவுருவச்சிலைகளும், மணி மண்டபங்களும் அமைத்துச் சிறப்புகள் செய்துள்ளோம்.
அந்த வரிசையில் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளைத் தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் உவகை பொங்கிடக்கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்பதற்காக, அந்த மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பதற்குத் தேவைப்படும் பொருள்களான அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பாசி பருப்பு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவை 20 கிராம் அடங்கிய பை வழங்கப்பட்டுள்ளது.
"பத்தன்று; நூறன்று; பன்னூறன்று; புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்!''
எனப்புரட்சிக்கவிஞர் பாடியதற்கேற்ப மங்கிக் கிடந்திடும் பழந்தமிழ் மரபுகள் பொங்கிப் பெருகி எங்கும் தழைத்திடல் வேண்டும் என்னும் உணர்வோடு இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தைத்திங்கள் முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் திருநாளாகக் கொண்டாடும் என் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும், இதயங் கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.