பொங்கல் நன்னாளில் அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும் என்ற என்னுடைய அவா வினைத்தெரிவித்து, அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பெருகட்டும்! அமைதி தவழட்டும்! செல்வம் செழிக்கட்டும்! என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் என் இனிய தமிழ்மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழவர்கள் தங்களுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள்! பயிர் விளையக் காரணமாயிருந்த பகலவனுக்கு காணிக்கை செலுத்தும்நாள் பொங்கல் திருநாள்! உழவர்கள் வாழ்வில் ஆக்கம் பெற்று மகிழும் நாள் பொங்கல் திருநாள்! உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நாள் பொங்கல் திருநாள்!
இந்த நன்னாளில், அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும் என்ற என்னுடைய அவா வினைத்தெரிவித்து, அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பெருகட்டும்! அமைதி தவழட்டும்! செல்வம் செழிக்கட்டும்! எனமனமார வாழ்த்தி என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.