தி.மு.க.வின் பணபலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் பண பலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன; ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.
7.1.2009 அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக்கூடாது, தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் தி.மு.க அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் குண்டர்கள் உள்பட தி.மு.க.வினர் அனைவரும் அதன் பின்னரும் தொகுதிக்கு உள்ளேயே வலம் வந்துகொண்டிருந்தனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான் போலும். தி.மு.கவினருக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்ற அளவிற்கு தி.மு.க அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்குள் 7.1.209 அன்று மாலை 5 மணிக்குப் பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீடுவீடா கச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் இருந்தே காவல்துறை கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
9ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் 30,000 முதல் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறும் என அழகிரி அன்றே அறிவித்தது; திருமங்கலம் இடைத்தேர்தல் நல்ல செய்தியைத் தரும் என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக தி.மு.க.வினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது; வெற்றியை பாராட்டி விளம்பரப் பலகைகள் வைத்தது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத்தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
கருணாநிதி முதலமைச்சராகவும், அவரது மகன் அழகிரி நிழல் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் காவல்துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறையாக செயல்படும் வரையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் என்பது சடங்கு, சம்பிரதாயம் போலத்தான். தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பாடுபட்ட தோழமைக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.