தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும் என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு, இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைக் காலமாக சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க, இந்திய அரசு ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது.
கிளிநொச்சியை விட்டு விடுதலைப் புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3ஆம் தேதி அதிகாலையில் சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து சில 'ரா' அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.
உயர்ந்த தொழில்நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும், தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.
முதலமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க 'ரா' அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில்நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.
இந்திய அரசு, இந்தக் "காட்டிக் கொடுக்கும்'' கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.