சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி பா.ஜ.க. சார்பில் சென்னையில் வரும் 12ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை வேடம் போடுகின்றன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை அமல்படுத்த தமிழக முதலமைச்சர் நேரில் சென்று வலியுறுத்தியும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார்.
பிரணாப் முகர்ஜி கொழும்பு செல்வார் என அறிவித்து விட்டு இதுவரை செல்லாமல் இருப்பதும், அதை நியாயப்படுத்தி அமைச்சர் டி.ஆர்.பாலுவே அறிக்கை விடுவதும் தி.மு.க மீது சந்தேகத்தை கிளப்புகின்றன. தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ளவும் ஈழத் தமிழரின் உடமையை காவு கொடுக்க தி.மு.க தயாராகிவிட்டது என்பதையே இந்த மெத்தனம் நிரூபிக்கின்றது.
அதேபோல சிங்கள ராணுவத்துக்கு ஆயுதமும், ஆலோசனைகளையும் பயிற்சியையும் இந்தியாதான் வழங்கி வருகிறது என்கின்ற குற்றச்சாற்றையும் மத்திய அரசு மறுக்கவில்லை. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நாம் போரினை சந்தித்த போது இலங்கை அரசு நம்மை ஆதரிக்கவில்லை.
மத்திய- மாநில அரசுகள் இரட்டை வேடத்தை கலைக்கவும்
ஆனால் தற்போது இந்தியாவை பின்பற்றி இலங்கை அரசும் கிரிக்கெட் விளையாட தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில்லை என முடிவு செய்திருப்பது இந்தியா தந்த ஆயுத உதவிக்கு பிரதிபலனா என்கின்ற சந்தேகம் எழுகிறது. ராணுவத் தீர்வு சாத்தியமல்ல என்று இந்தியா உட்பட உலக நாடுகள் எல்லாம் கருத்து சொல்லிய பிறகும் தீர்வு என்ன என்பதைச் சொல்லாமலேயே இனப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசே நடத்தும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறேன்.
மத்திய, மாநில அரசுகள் தங்களது இரட்டை வேடத்தை கலைத்துவிட்டு இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்தி பேச்சுவார்த்தை துவங்கிட இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். மாறாக இலங்கை அரசு போரைத் தொடருமானால் இந்தியா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரிக்க வேண்டும்.
சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையிலும் பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் முன்னிலையிலும் நடைபெறும்.
பொன். ராதாகிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், எச்.ராஜா உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக சென்னையில் வரும் 9ஆம் தேதி பா.ஜ.க. நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.