பொதுவாக ஹெச்ஐவி வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்தவுடனேயே அவர்களை ஒதுக்கி வைத்து, தனிமைப்படுத்துவதுடன், அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாத சமூகத்தை பார்க்கிறோம்.
ஆனால், ஹெச்ஐவி தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண், தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராமத்தில் பஞ்சாயத்து உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், தன்னை நம்பி வாக்களித்த வார்டு மக்களுக்கு பல அடிப்படை வசதிகளையும் செவ்வனே நிறைவேற்றி சாதனை படைத்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். கோடங்கிப்பட்டி பஞ்சாயத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போட்டியிட்டு உறுப்பினரானவர் ஈஸ்வரி. இவருக்கு, கணவர் மூலமாக ஹெச்ஐவி தொற்று பரவியது. தனது இளைய மகனுக்கும் ஹெச்ஐவி பாதிப்பு உள்ளதாகக் கூறும் ஈஸ்வரி, தொடர்ந்து அந்நோய்க்குரிய தடுப்பு மருந்துகளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கிறார்.
பல ஆண்டுகளாக கோடங்கிபட்டி கிராம மக்களுக்கு கிடைக்காத அடிப்படை வசதிகளான தார் சாலைகள், சுகாதாரமான குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றித் தந்துள்ளார் ஈஸ்வரி.
ஈஸ்வரியின் செயல்பாட்டை அந்த கிராமமே வாயாறப் புகழ்ந்து கொண்டிருக்கிறது. ''ஈஸ்வரி கேட்கும் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்'' என்று கோடங்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.திருக்கண்ணன் தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றும் ஈஸ்வரிக்குப் பின்னும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால், அவருக்கு 3 குழந்தைகள் இருந்தன. ஆனால், 2 பெண் குழந்தைகளை எய்ட்ஸ் நோய்க்குப் பறி கொடுத்து விட்டார். தற்போது இளைய மகனுடனும், கணவருடனும் வாழ்ந்து வருகிறார்.
ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை சாதனையாகக் கருதும் ஈஸ்வரி, தனது வாழ்க்கையை ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக அர்ப்பணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.