Publish Date: Wed, 07 Jan 2009 (10:20 IST)
Updated Date: Wed, 07 Jan 2009 (10:19 IST)
திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டும் திருப்புமுனையாக அமையப்போவதில்லை. அது இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையப்போகிறது என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து ஜெயலலிதா பேசுகையில், தி.மு.க பிரசார கூட்டத்துக்கு கிராமப் பெண்களை காசு கொடுத்து கூட்டி வந்ததை, பிரசாரத்தின்போது நானே பார்த்தேன். வெளியூர் சென்றால் துணிமணி, உணவு கொண்டு செல்வது போல் தொண்டர்களை தங்களுடனேயே அழைத்துச் சென்று கூட்டம் காட்டுகின்றனர்.
அ.இ.அ.தி.மு.க.வினரை காவல்துறையினரே அடித்து பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியுள்ளனர். கடந்த 1974இல் தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவு மத்திய அரசால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதனால் தமிழக மீனவர்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. இது வெற்றியின் முதல்படி. மீனவர்கள் வாழ்வில் ஒளிபிறக்கும்.
பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தி.மு.க எதுவும் செய்யவில்லை. எப்படியாவது வெற்றி பெற தி.மு.க திட்டமிட்டுள்ளது. எனவே தேர்தலுக்கு முதல்நாளில் உங்கள் வீட்டுக்கு அரைபவுன் தங்கநாணயம் வரும். வந்தால் விடாதீர்கள். அதை பெற்றுக் கொண்டு பொங்கலை தடபுடலாக கொண்டாடுங்கள். ஆனால் 9ஆம் தேதி மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள்.
தமிழகத்தில் விலைவாசி, பேருந்து கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மின்வெட்டு தமிழகம் முழுவதும் உள்ளது. மத்திய அரசு தரும் மின் அளவைக் குறைத்ததே மின்வெட்டுக்கு முக்கிய காரணம். என் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு மின்சாரத்தை குறைக்காமல் பார்த்துக் கொண்டேன்.
தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையவும், அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கவும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு வாக்களியுங்கள். இந்த இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டும் திருப்புமுனையாக அமையப்போவதில்லை. அது இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையப்போகிறது. என்று ஜெயலலிதா பேசினார்.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் என்.வரதராஜன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ ஆகியோரும் பேசினர்.