திருமங்கலம் தொகுதியில் லதா வெற்றி உறுதி: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான் உறுதியாக வெற்றிபெறுவார் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் இலவச சமையல் எரிவாயு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருமங்கலம் தொகுதி இடைதேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் லதா அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தற்போது லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இவர்கள் போராட்டம் முடிந்து சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.
சமையல் எரிவாயு இணைப்பு பெறும்போது உடன் அடுப்பு வாங்கவேண்டும் என்று ஏதாவது முகவர்கள் கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கவும். சம்பந்தப்பட்ட எரிவாயு முகவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.