லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.300 கோடி சரக்குகள் முடங்கிக் கிடக்கிறது.
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் 4 1/2 லட்சம் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தியாகும் இடங்களிலும், நடுவழியில் லாரிகளிலும் பொருட்கள் தேங்கிக் கிடப்பதால் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 20,000 லாரிகள் ஓடவில்லை. அண்டை மாநிலங்களுக்கு செல்லவேண்டிய மெஷினரி வகைகள், பம்புசெட், கட்டிட கம்பிகள், மாட்டுத்தீவனம், பனியன் துணி வகைகள், மஞ்சள், பெட்ஷீட், தலையணை உள்ளிட்டவை தேங்கியுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 5,000 லாரிகள் ஓடாததால், அயல் மாநிலங்களுக்கு செல்லவேண்டிய ஜவுளி, மஞ்சள், மாட்டுத்தீவனம், அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்ற ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 தனியார் சிமெண்ட் ஆலைகளிலிருந்து தினமும் 20,000 டன் சிமெண்ட் லாரிகளில் பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். வேலை நிறுத்தத்தால் சிமெண்ட் அனுப்பும் பணிகள் முடங்கின. வேதாரண்யத்திலுள்ள உப்பளங்களிலிருந்து உப்பு ஏற்றும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் முடங்கின. அயல்நாடுகளில் இருந்து 6 கப்பல்களில் வந்த நிலக்கரி, பாமாயில் உள்ளிட்ட சரக்குகளை வெளியே கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் கடந்த 2 நாட்களில் 4 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. லாரி வேலை நிறுத்தத்திற்கு கோழிப்பண்ணையாளர் சங்கம் 2 நாள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளதால், நாளை முதல் காவல்துறை பாதுகாப்புடன் முட்டைகளை லாரிகளில் கொண்டு செல்ல பண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதே போல், சத்துணவு திட்டத்திற்கும் காவல்துறை பாதுகாப்புடன் முட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன.
வேலை நிறுத்தம் தொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில், மத்திய அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைக்கவில்லை. அதனால் வேலை நிறுத்தம் தொடரும். இந்தியா முழுவதும் 50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.300 கோடி சரக்குகள் முடங்கிக் கிடக்கும்.
பொங்கல் பண்டிகை விற்பனைக்காக குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய துணிகள் வந்து சேரவில்லை. இதனால் துணி விற்பனை பாதிக்கப்படும். இதே போல வேறு பல பொருட்கள் எடுத்து செல்லப்படுவதிலும் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 50 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.