பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் தினமும் ரூ.1000 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும், தேசிய அனுமதி பெற்ற லாரிகளுக்கான வரியை ரூ.5000ல் இருந்து ரூ.1500 ஆக குறைப்பது, டயர்களுக்கான 35 சதவீத வரியை ரத்து செய்தல், பழுதான சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் 5ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகளுடன் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதையடுத்து, லாரிகள் வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் துவங்கியது.
தமிழகத்தில் 1.45 லட்சம் சரக்கு லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள், மேக்ஸிகேப் வாகனங்கள் உள்பட 1.74 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை.
இது குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், ‘‘டெல்லியில் மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயராமல் தடுப்பதில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம். அதே நேரம், லாரி தொழில் நலிவடையாத வகையில் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் விரைவில் தீர்வு காண வேண்டும்'' என்றார்.
லாரிகள் வேலை நிறுத்தத்தால், தமிழகத்தில் மட்டும் தினமும் ரூ.1000 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரையில் நாள் ஒன்றுக்கு 2 1/2 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கேரளாவுக்கு 60 லட்சம், அயல்நாடுகளுக்கு 30 லட்சம், பெங்களூருக்கு 10 லட்சம், தமிழக சத்துணவு திட்டத்திற்கு 30 லட்சம் எனவும், மற்றவை தமிழகம் முழுவதும் சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் அனைத்தும் லாரிகள் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்து செல்லப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதால், அயல் நாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் ஏறத்தாழ ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன.
ஆனால், தமிழகம் முழுவதும் முட்டைகள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. இன்று (5ஆம் தேதி) முதல் இந்த பணியும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே, லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கமும் முதல் 2 நாட்கள் ஆதரவு தெரிவித்து உள்ளது. அதற்கு மேலும் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிக்குமானால், முட்டைகளை காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி தெரிவித்துள்ளார்.