திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு வருவதால், அங்கு தேர்தல் நியாயமான முறையில் நடக்க வாய்ப்பில்லை என்றும் எனவே, அங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் அ.தி.மு.க சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், மலைச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூருல்ஹுடா, ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் கையெழுத்திட்ட புகார் மனுவை அளித்தனர்.
அந்த புகார் மனுவில், "திருமங்கலம் தேர்தல் களத்தில் பல வேட்பாளர்கள் இருந்தாலும், அ.தி.மு.க வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; எனவே அ.தி.மு.க.வின் இந்த வெற்றி வாய்ப்பை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் ஆளும் தி.மு.க.வினர் பெருமளவு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
திருமங்கலத்தில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, திருமங்கலத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள இனியும் எந்தவிதமான தாமதமும் செய்யாமல் உடனடியாக துணை ராணுவப்படையினரை ஈடுபடுத்த வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.