புத்தாண்டு கொண்டாட்டம் இரவு ஒரு மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது என்று தெரிவித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், புத்தாண்டையொட்டி இரவு 10 மணி முதல் 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு இருக்கும் என்றார்.
குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்றும் கொண்டாட்டத்தின் போது எந்த வரம்பு மீறிய செயலிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் இவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை காவல்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு உறுதி செய்வார்கள் என்று என்றார் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்.
நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்கள் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நீடிக்கக் கூடாது, அதற்குள் கொண்டாட்டத்தை அனைவரும் முடித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்பிவிட வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக எந்த ஒரு செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.