ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்றும் இலங்கையில் மனித உரிமை மீறப்படுகிறது என்றும் பா.ஜ.க. மேலிடப்பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அப்பாவி ஈழத்தமிழர்கள் நாளுக்கு நாள் பெரும் துயருக்கு ஆளாகி வருவதுடன் தினமும் பலர் அங்கே மடிந்து வருகிறார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.
இலங்கையில் நடைபெறும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி வைத்து தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசிடம் தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் மத்திய அரசு இதனை காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உறுதி மொழியையும் இங்குள்ள தி.மு.க. அரசால் பெறமுடியவில்லை.
பா.ஜ.க. வைப் பொறுத்தவரையில் இலங்கை தமிழர்களை முழுமையாக ஆதரிக்கிறது. அவர்கள் உயிர், சொத்துக்கள், உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க.விற்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. மனித உரிமை ஒப்பந்தம் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டு 60-வது ஆண்டு கொண்டாடப்படுகிற இந்த நாளில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.