திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேச்சுக்கு தி.மு.க தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலை சிறுத்தைகள் கடந்த 26ஆம் தேதி நடத்திய மாநாட்டில், சுப.வீரபாண்டியன் பேசும்போது, 'சத்திய மூர்த்தி பவனை விடுதலைச் சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதாக தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே திருமாவளவன் உத்தரவிட்டு இருந்தால், சத்திய மூர்த்தி பவன் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும்' என்று பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
எந்த ஒரு பேச்சாளரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அலுவலக கட்டடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்வதோ, தகர்ப்போம் என்று பேசுவதோ, ஒரு ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. ஆனால், சுப.வீரபாண்டியன் பேச்சு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. எனவே, திமுக சார்பில் சுப.வீரபாண்டியனுடைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.