சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 11 பேரும், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 62 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காங்கிரசார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட 62 பேரை கைது செய்தனர்.
இதேபோல் மோதலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 11 கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.