சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்த மோதல் குறித்து கருத்து தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், பலவீனப்படுத்தவும் சில சக்திகள் இதை பெரிதுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாற்றினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், காங்கிரசாருக்கும் நடந்த மோதலின் போது திருமாவளவனை கைது செய்யுங்கள் என்று முழக்கமிட்டதுடன் அங்கு வைக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகளின் மாநாட்டு விளம்பரத் தட்டிகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். விளம்பரத் தட்டிகளை நிறுவுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதை தடுத்துள்ளனர் என்றார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஓடி வந்த சிலர் விடுதலை சிறுத்தைகளை அடித்துள்ளனர் என்று தெரிவித்த திருமாவளவன், காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் அப்புறப்படுத்தியுள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு திரண்டு சென்று சத்திய மூர்த்தி பவனை தாக்கியதை போல வதந்தியை பரப்பி ஆங்காங்கே பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
இந்த பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்களை தூண்டிவிடும் போக்கு ஏன் என்று விளங்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவும், பலவீனப்படுத்தவும் சில சக்திகள் இதை பெரிதுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று திருமாவளவன் குற்றம்சாற்றினார்.
ஈழப்பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கொண்டுள்ள நிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் கொச்சைப்படுத்த முயன்றதில்லை என்று தெரிவித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைதியையும் கட்டுப்பாடையும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, டி.சுதர்சனம் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்று திருமாவளவன் தெரிவித்தார்.