மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், நாளை பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த நாளில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு நாளை அனுசரிக்கப்படுகிறது.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து டிசம்பர் 6ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் விமான நிலையம், துறைமுகம், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களது உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. முக்கிய இடங்களில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. நகரில் 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். நகர எல்லைகளில் வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 6 மணி வரை போர் நினைவுச் சின்னம் முதல், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை உள்ள பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
கணினி நிறுவனங்கள், வர்த்தக மையங்களிலும் காவல்துறையினர் சாதாரண உடைகளில் கண்காணித்து வருகின்றனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலை சுற்றி கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் ஏற்றுள்ளனர். அவர்களுடன் கமாண்டோக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், பூம்புகார் படகுதுறை, கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.