காங்கிரஸ், பா.ஜ. கட்சிகளுடனோ, அந்த கட்சிகளுடன் உறவு வைத்துள்ள கட்சிகளுடனோ அல்லாமல் மாற்று அணி அமைப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன், மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ப. செல்வசிங், இந்திய கம்ஞ்னிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர். நல்லக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் ஏ.எம். கோபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், ஏ.பி. பரதனுடன் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டோம்.
பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடனோ, அந்தக் கட்சிகளுடன் உறவு வைத்துள்ள கட்சிகளுடனோ உறவு வைத்துக்கொள்ள மாட்டோம். பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி அமைப்போம். மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தா. பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய அனைத்துக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ஜி. ராமகிருஷ்ணன், இரு கட்சிகளுக்குமிடையே சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. இல்லையென்றால் ஒரே கட்சியாக இருந்திருக்குமே என்று பதிலளித்தார்.