ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக பா.ஜ.க.வினர் இன்று ஒகேனக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான தெங்கிமாதேவு தலைமையில் மாறுகொட்டாய் பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள் கையில் கொடி மற்றும் வாசகங்களை ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஒகேனக்கல் தங்களுக்கே சொந்தம் என்று கோஷம் போட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்க மாறுகொட்டாயில் கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து இருந்தனர்.
அப்போது போராட்டம் நடத்தி கொண்டிருந்த பா.ஜ.க.வினர் திடீரென்று தமிழக எல்லைக்குள் புக முயன்றனர். உடனே கர்நாடக காவல்துறையினர் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கர்நாடக, தமிழக காவல்துறையைக் கண்டித்தும் கோஷம் போட்டனர். தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல்லில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க 400க்கும் மேற்பட்ட தமிழக காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.