மின்சார நெருக்கடி தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிக்கையை தந்து தமிழக அரசு மக்களை குழப்பி வருவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று மின்சாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியவில்லை. தமிழக அரசாவது ஒரு தெளிவான திட்டத்தை வைத்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உண்மையில் தமிழக அரசே மின்சார நெருக்கடி சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிக்கையை தந்து மேலும் மக்களை குழப்பிக் கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு பெரிய தொழிற்சாலைகளுக்கு அரசு 40 விழுக்காடு மின்வெட்டை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் உச்ச நேரத்தில் அதாவது மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள் 3 மணி நேரத்திற்கு மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை போன்ற தடைகளின் காரணமாக 70 விழுக்காடு மின்வெட்டு பெரிய தொழிற்சாலைகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 20 விழுக்காடு மின்வெட்டு என்று அறிவித்தாலும் உண்மையில் 55 விழுக்காடு மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. நாளொன்றுக்கு 3 தடவை, 2 தடவை என்று ஷிப்டு முறையில் இயங்கிய தொழிற்சாலைகள் ஒரு ஷிப்டு கூட சரியாக இயங்க முடியவில்லை.
தொடர்ந்து இயங்க வேண்டிய உருக்கு தொழில் போன்ற தொழிற்சாலைகள் அறவே இயங்க முடியவில்லை.
தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சார உற்பத்தி செய்ய எஸ்ஸார் ஆயில் கம்பெனியில் மட்டும்தான் டீசல் பெற முடியும். ஒரு லிட்டர் டீசல் தொழிற்சாலைகளுக்கு ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
இதைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.15 ஆகின்றது. தற்போது மின்சார வாரியத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.28-க்கு கிடைக்கிறது. டீசலை வைத்து மினாரம் உற்பத்தி செய்து தொழிற்சாலைகள் நடத்தினால் கட்டுப்படியாவதில்லை. நஷ்டம்தான் மிஞ்சுகிறது.
தமிழ்நாடு முழுவதும் நூற்பாலைகள், சிறு, குறுந்தொழில்கள், பின்னலாடை நிறுவனங்கள், பணிமனைகள், வணிகநிறுவனங்கள், ஓட்டல்கள் பெரிய தொழில்நிறுவனங்கள் போன்றவை மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்திய அரசிடம் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் பெற முடியும் என்றும் அது 1,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பற்றாக்குறை 2,000 மெகாவாட்டாக இருக்கின்ற போது இந்த அறிவிப்பு எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தது என்பது அமைச்சருக்குத்தான் வெளிச்சம்.
மக்களை பொறுத்தவரை கடந்த 11 மாதங்களாக இந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நெருக்கடி தீர, மின்பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறைய மின் உச்சத் தேவையை விஞ்ஞான ரீதியில் நிர்வகிக்க, தமிழக அரசு எத்தகைய உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.