Publish Date: Fri, 21 Nov 2008 (04:45 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (04:44 IST)
திருவாரூர் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோயிலிற்கு சாமி கும்பிட வந்த இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் காரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காட்டில் உள்ள அக்னீஸ்வரர் கோயிலிற்கு ரனில் விக்ரமசிங்கே வருவதை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்கூட்டியே அங்கு திரண்டனர்.
ரனில் விக்ரமசிங்கே கோயிலை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்தபோது, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு, இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிப்பதை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்று முழக்கமிட்டபடி, ரனில் விக்ரமசிங்கே காரை முற்றுகையிட்டனர்.
சிறிது நேர பரபரப்பிற்குப் பிறகு, காரை முற்றுகையிட்டவர்களை விலக்கிய காவல் துறையினர், ரனில் விக்ரமசிங்கேயே கோயிலிற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.