ஈரோட்டில் விரிவான விசைத்தறி தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக, 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் செயல்படுத்தப்படவிருக்கும் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக சிறந்த உள்கட்டமைப்பு வசதி, நவீன தொழில்நுட்பம், போதுமான பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு போன்ற வசதிகள் விசைத்தறி உரிமையாளர்களுக்கு செய்து கொடுக்கப்படும். உலகத்தரம் வாய்ந்த விசைத்தறி கூடங்கள் அமைப்பதற்கு இந்த வசதிகள் அவர்களுக்குப் பயன்படும்.
விசைத்தறி தொகுப்பு திட்டத்தில், மூலதனப் பொருட்கள் வங்கி, ஆடை வடிவமைப்பு, உயர் தொழில்நுட்பம், விற்பனை வசதி, கடனுதவி, சமூக பாதுகாப்பு போன்ற பல வசதிகள் நெசவாளர்களுக்குக் கிடைக்கும்.
சாலை வசதி, மின் விநியோகம், நீர் விநியோகம், வடிகால் மற்றும் சுகாதார வசதிகள், தெரு விளக்குகள், சுற்றுச்சுவர், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் விசைத்தறி தொகுப்புக்கு வழங்கப்படவுள்ளன.
நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும். இது பொது-தனியார் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டம் 2008-09 முதல் 2011-12 வரை நான்காண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
விசைத்தறி தொகுப்பு மேம்பாட்டு திட்டம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டியிலும் ரூ.70 கோடி செலவில் 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்படவுள்ளது.