மாணவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், செயல்படாமல் நின்ற காவல் துறையை வன்மையாக கண்டிப்பதாகவும், கல்லூரி முதல்வர், மாணவர்கள், காவல்துறையினரிடம் நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சென்னை சட்டக்கல்லூரியில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும், வெளியில் இருந்து வந்து படிக்கும் பிற மாணவர்களுக்கும் ஏற்பட்ட தகராறில், ஒரு சில மாணவர்கள் கொலை வெறியோடு 2 மாணவர்களை தாக்கியதை தொலைக்காட்சியில் பார்க்கும் போது நெஞ்சே பதறுகிறது.
இந்த கொடுமையான மோதலை தடுத்து நிறுத்த வேண்டிய காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது மிகவும் கேவலமான செயல். மாணவனின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில், செயல்படாமல் நின்ற காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
உடனடியாக நீதிவிசாரணை கமிஷன் அமைத்து, கல்லூரி முதல்வர் முதல், கொடுஞ்செயல் புரிந்த மாணவர்கள், வேண்டுமென்றே வேடிக்கை பார்த்த காவல் துறை என அனைவரிடமும் நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.