ஊழல் வழக்கில் இந்திய உணவுக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் பி. விஜய் அமலதாஸ் குற்றவாளி என்று மத்தியப் புலனாய்வுக் கழகச் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ம.பு.க. வழக்குகளுக்கான முதன்மைச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகநாதன் தீர்ப்பளித்தார்.
கடந்த 1993 ஜனவரி முதல் தேதி முதல் 2002 மார்ச் முதல் தேதி வரை கடலூர், பங்குரா, மால்டா ஆகிய இடங்களில் இந்திய உணவுக் கழகத்தின் துணைப் பொது மேலாளர் மற்றும் கூடுதல் பொது மேலாளர் பதவிகளை வகித்து வந்த விஜய் அமலதாஸ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைப் பெருமளவில் குவித்துள்ளார் என்று குற்றம்சாற்றப்பட்டது.
விஜய் அமலதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.18 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் கணக்கில் வராமல் முறைகேடாக உள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் விஜய் அமலதாஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2002 ஆம் ஆண்டு ம.பு.க. வினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.