தமிழ் இனம் அழிவதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும் இந்தப் பிரச்சனையில் அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற அறவழிப் போராட்டம் தேவை என்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் பேசிய சரத்குமார், ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்திற்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளித்தோம். இந்தப் போராட்டத்தில் கட்டுப்பாடு விதித்துள்ளீர்கள் என்று சிலர் ஆதங்கப்பட்டார்கள். அடக்கிவிட்டீர்கள் என்று கூட சொன்னார்கள். தனிப்பட்ட முறையிலே பேசி விளைவை சந்தித்து இருக்கலாம். ஒரு அமைப்பு என்று வரும்போது நியாயமான தீர்க்கமான நல்ல உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே நடிகர் சங்கம் இருந்து வந்துள்ளது.
சீனா, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர் காலங்களிலும் நடிகர் சங்கம் தனது உணர்வுகளை சிறப்பாக பதிவு செய்து வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் சினிமா கலைஞர்களின் முதல்கட்ட போராட்டம் ராமேஸ்வரத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட போராட்டம் மனித சங்கிலி. இது 3-வது கட்ட போராட்டம் ஆகும். ஆகவே, எங்களுக்குள் எந்தப் பிரிவும் கிடையாது. எங்களை யாரும் பிரித்துப் பார்க்கவும் முடியாது. உணர்ச்சிகரமாகப் பேசினால் அதனை மறப்போம் மன்னிப்போம் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நாம் அனைவரும் கலைக் குடும்பமாக ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். உணர்ச்சிகரமாகப் பேசி சிறை செல்ல நாங்கள் தயாராக இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். சட்டம் ஒன்று இருக்கிறது. அதன்படி பேச வேண்டும் என்பதால்தான் அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.
சினிமா அனைவரையும் மகிழ்விக்கும் இடம். மக்களுக்காக போராட எப்போதும் காத்து இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். கலைக்குடும்பம் என்றும் தனது உணர்வை வெளிப்படுத்தும் என்பது உண்மை. அமைதியான ஆறு ஆழமாகப் பாயும் என்பார்கள். அதுபோல நடிகர் சங்கமும் அமைதியான ஆறு போன்றது. அது எப்போதும் தனது உணர்வை ஆழமாகப் பதிவு செய்யும்.
இலங்கையில் 60 ஆண்டுகளாக அமைதி ஏற்படவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழன் இனம் அழிக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் அந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற அறவழிப் போராட்டம் தேவை என்று நடிகர் சரத்குமார் பேசினார்.