அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க உடனடியாக போரை நிறுத்துமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரி, சென்னையில் நேற்று நடைபெற்ற நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் வாழும் நம் தொப்புள் கொடி உறவான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அங்கு நடந்து கொண்டு இருக்கும் போரினால் ஏற்பட்டு இருக்கும் இன்னல்களை நிரந்தரமாக களைய மத்திய, மாநில அரசுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்தி எங்களது ஆதரவு குரல்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கின்றோம்.
கடலில் நமது தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கைது செய்து துன்பப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இலங்கை கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற கோருகிறோம்.
நடிகர் சங்கத்தின் ஒற்றுமையும், உணர்வுகளையும் திரளாக கூடி, பதிவு செய்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி அளித்து, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடைகள் கிடைக்க கணிசமான நிதியாக ரூபாய் 44 லட்சத்து 89 ஆயிரத்து 714 அளித்துள்ளோம். இத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ரூ.1 லட்சம் சேர்த்து மொத்தம் ரூ.45 லட்சத்து 89 ஆயிரத்து 714 நிதி அளிக்கிறோம்.
இந்த உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சென்றடையவும், மேலும் தமிழ் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.