இலங்கைப் பிரச்சனையில் முதல்வரின் போக்கில் மாற்றம்- ராமதாஸ் குற்றச்சாற்று!
, சனி, 1 நவம்பர் 2008 (19:19 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக முதல்வரின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் முயற்சியில் நாம் இன்னும் வெற்றிபெற முடியவில்லை. அங்கு தமிழர்கள் கொல்லப்படும்போதும், தமிழ்ப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்போதும் பொங்கி எழும் நமது உணர்வுகள் உடனே அடங்கி விடுகின்றன. கடந்த மாதம் நடந்துள்ள நிகழ்வுகளும் அப்படித்தான். 14ஆம் தேதி கோட்டையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள 2 வாரத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகுதல் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மறுநாளே அந்தத் தீர்மானங்களை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமரிடம் கொடுத்தார். இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி 16 ஆம் தேதி மனித சங்கிலி நடத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் அந்தப் போராட்டம் 24 ஆம் தேதி நடந்தது. அன்று பேசிய கருணாநிதி, நாம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பிரதமர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளார் என்று குறிப்பிட்டார்.அன்று முதல் வேகம் குறையத் துவங்கியது. 26ஆம் தேதி வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய அரசிற்குச் சிக்கலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அன்றோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.இதையடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவ நிவாரண நிதி திரட்டப் போவதாக 27ஆம் தேதி முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். நிதி திரட்டுவது தவறு இல்லை. ஆனால் நிதி திரட்டுவது மட்டுமே தீர்வாகாது. நிவாரண நிதி வசூல் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் திசை திருப்பிவிட்டனர். தமிழர்களின் எழுச்சி மழுங்கத் துவங்கி இருக்கிறது. முழுக் கவனமும் நிதி வசூலில் முடங்கிக் கிடக்கிறது. போர் நிறுத்தக் கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உண்மையான நிவாரணம் உடனடி போர் நிறுத்தம்தான். சண்டை ஓய்ந்து விட்டால் நிவாரணங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள். போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துவதில் நாம் தோற்றுவிட்டோம்.மத்திய அரசை செயல்பட வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. அனைத்துக் கட்சி தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதற்கு கருணாநிதி பதில் சொல்ல வேண்டும். வெளிப்படையாகவே மத்திய அரசை கண்டிக்க வேண்டும். ராஜபக்ச மீது வழக்கு தொடர ஐ.நா. சபை மூலம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இந்த பிரச்சனையில் கருணாநிதி இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறினார்.