இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட விரும்புவோர் தலைமைச் செயலாளரிடமோ அல்லது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமோ நேரடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ள வேண்டுகோளில், தமிழக அரசின் அறிவிப்புக்கு இணங்க ஈழத் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குபவர்கள் அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். நிதி உதவி தர விரும்புவோர் ''Sri lankan Tamils Relief Fund'' என்ற பெயரில் காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை- 600009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
உணவுப் பொருட்கள் போன்ற நிவாரணப் பொருட்களாக இருந்தால் அவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் நேரிடையாக அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிவாரண உதவிகளை சேகரிக்கும் பொறுப்பு தனிப்பட்ட எந்த ஒரு நபருக்கோ, நிறுவனத்திற்கோ, அமைப்பிற்கோ அரசால் வழங்கப்படவில்லை. நிவாரணப் பொருட்களை வழங்குபவர்கள் அழுகக்கூடிய உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரிசி, பருப்பு போன்ற தானியங்களுக்கே அதிக தேவை உள்ளது என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கவும், வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருள்கள், உடைகள் போன்றவற்றை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் வழங்கி உரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும், நிதியுதவி செய்திட விரும்புவோர் "SriLankan Tamils Relief Fund'' என்ற பெயரில் காசோலைகளாகவோ, வரைவோலைகளாகவோ தயாரித்து, தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கருணாநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.