தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரியா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம் மருத்துவமனைகளில் இரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது சுகாதாரத்துறை இயக்கத்தில் உள்ள உயர் அலுவலர்கள் அனைவருக்கும் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு, மாவட்டங்களில் சென்று நோய் தடுப்பு பணிகளை மேற்பார்வையிட பணிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. குடிநீர் நிலைகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் தண்ணீர் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும், கொசு மூலம் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா, லெப்டோபைரோசிஸ் போன்ற நோய்கள் திடீர் என பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது மக்கள் கீழ்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை அனுசரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும், உடைந்த குடிநீர் குழாய்களில் அல்லது குழி தோண்டி தண்ணீர் பிடிப்பதை தவிர்க்கவும். குடிநீர் குழாய்களை நீர்வராதபோது நன்கு மூடிவைக்கவும், சுகாதாரமற்ற சூழ்நிலையில் விற்கும் உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும்.
தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உப்பு கரைசல் நீரை (ஓ.ஆர்.எஸ்) பருகவும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும். சுகாதாரத்துறைக்கு தகவல் தரவும், குடிநீர் நிலைகளுக்கு குளோரினேசன் செய்ய வரும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
வீட்டை சுற்றிலும் நீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே வீட்டை சுற்றி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்கவும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் அது மலேரியா, டெங்கு மற்றும் சிக்கன்குன்யா என்று தெரிந்து கொள்ள அருகிலுள்ள சுகாதார நிலையம் மருத்துவமனைகளில் இரத்தப்பரிசோதனை செய்து கொள்ளவும். மேற்படி நோய் இருப்பின் அரசு மருத்துவமனைகளை அணுகி இலவச சிகிச்சை பெறவும்.
உள்ளாட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளால் குடிநீர் பாதுகாப்பு, தொற்றுநோய் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிராம சுகாதார குழுவிற்கு சுகாதாரத்தை பராமரிக்க ரூ.10,000, வீதம் ரூ.12 கோடி வரை நிதி தரப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தேவையான எல்லா மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசு ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.