மத்தியில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை இனப் பிரச்சினைக்கு 6 மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறினார்.
இலங்கை இனப் பிரச்சினை இன்றோ, நேற்றோ தொடங்கியதல்ல; அது 40 ஆண்டு காலமாக நீடித்து வரும் பிரச்சினை. இதனை 4 நாட்களில் தீர்த்து விட முடியுமா? என்று முதல்வர் கேள்வியெழுப்பி இருப்பதை இல. கணேசன் குறை கூறியுள்ளார்.
நான்கரை ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு இலங்கைப் பிரச்சினையை தீர்க்காமல் 4 மாதத்தில் எம்.பி. பதவி முடிவடையும் நிலையில், ராஜினாமா செய்வோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு அந்நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை காக்கும் வகையில், இந்தியாவிடம் ஆதரவு கேட்கும் போது நாம் சில நிபந்தனைகளை விதிக்க உரிமை உண்டு என்றும், காரணம் ஒரு லட்சத்திற்கு அதிகமான இலங்கை அகதிகளை வைத்து நாம் பராமரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்து சென்ற இலங்கை அரசின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே, போரை நிறுத்த வேண்டாம். பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கட்டாய நிபந்தனைகளை விதிக்க நமக்கு உரிமை உண்டு. ஏனெனில் அது அண்டை நாடு அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க இந்தியாவிற்கு உரிமை உண்டு என்று கூறிய இல. கணேசன், இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சேகரிக்கப்படும் நிதி, நிவாரண பொருட்கள் அங்கு போய்ச் சேருமா? என்ற சந்தேகம் உள்ளது என்றார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட போது பாஜக அனுப்பிய பொருட்களை அந்நாட்டு அரசு தடுத்ததாகவும், அதுபோல் இப்போது தடுக்கப்படவில்லை எனில் பாஜக-வும், நிதி, நிவாரணப் பொருட்களைத் திரட்டி கொடுக்கத் தயார் என்றார்.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால், 6 மாத காலத்திற்குள் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.