ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பொது மன்னிப்புக் கோரி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை ஏற்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி, பி. ஜோதிமணி அடங்கிய உயர் நீதிமன்ற முதலாவது அமர்வு, ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.
சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுமன்னிப்பு விடுதலையை தனக்கும் அளிக்கக் கோரி நளினி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அண்மையில் தமிழக அரசு சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 465 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியதை அவர் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது மன்னிப்பு வழங்கக் கோரி கடந்த 2006ஆம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதி நாகமுத்து தள்ளுபடி செய்து அளித்த உத்தரவை எதிர்த்து நளினி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.