இலங்கைத் தமிழர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலர் தா.பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் அரக்கத்தனமான போரை உடனே நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் இந்திய ராணுவ வீரர்களை இலங்கையில் இருந்து திரும்ப அழைக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
''இலங்கைக்கு உணவு, உடை, மருந்து ஆகியவற்றை மத்திய அரசு அனுப்பவேண்டும். இந்திய மக்கள் தரும் உதவிகள் இலங்கை மக்களை சென்றடைய அனுமதி வழங்கவேண்டும். உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உண்ணாவிரதம் இருந்தோம்'' என்று தா.பாண்டியன் நினைவுப்படுத்தினார்.
சென்னையில் நாளை (இன்று) நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்துகொள்ளும் என்று கூறிய பாண்டியன், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் பல்வேறு கட்சிகளுக்கிடையே நடந்து வரும் சச்சையை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்துக்கட்சி எடுத்த முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை தமிழர்களை கொண்டு நமது அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடக்கூடாது என்றும் தா.பாண்டியன் கூறினார்.