வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக பெய்து வரும் பருவமழை, அடுத்த 36 மணி நேரத்துக்கு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பெய்த மழை நேற்றுக் காலை நின்றது. நள்ளிரவிற்குப் பிறகு சென்னையிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் பொழியத் துவங்கியது.
இன்று காலையிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 36 மணி நேரத்துக்கு சென்னை, புதுச்சேரி உள்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் பரவலாக மழை பெய்யும் என்றும் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.