தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். கும்பகோணத்தில் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. சென்னை, புளியந்தோப்பு ஆசாரி தெருவை சேர்ந்த சீனிவாசன் (45) என்ற உடல் ஊனமுற்றவர், வீட்டை வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகில் உள்ள அருள்நத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜா (எ) பாலகிருஷ்ணன் (29) ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நின்று கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி பலியானார்.
கும்பகோணத்தை அடுத்த தாராசும் ராணுவ காலனியை சேர்ந்த சுதாகர் (7), ஜெயலட்சுமி (எ) ஆர்த்தி (4) ஆகியோர் அருகில் உள்ள ஆற்றங்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தபோது வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வெள்ளாளர்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (63), என்பவர் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் (7) என்ற மாணவன், அங்குள்ள கண்மாயில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.