வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலையில் பலத்த மழை பெய்தது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது.
அதிகாலையில் இருந்தே மழை பெய்ய ஆரம்பித்தது. காலை 8.45 மணிக்கு பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்தில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
இந்த மழையால் மாணவ-மாணவிகள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைவிட வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் காட்சி அளித்தது.
சென்னையில் மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வில்லிவாக்கம், மயிலாப்பூர், பாண்டிபஜார், தேனாம்பேட்டை, தி.நகர், ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, புரசைவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
சென்னையில் இன்று காலை மட்டும் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில் மழை மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.