வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது.
தென் தமிழகத்தில் பலத்த மழையும், மற்ற பகுதிகளிலும், சென்னையிலும் மழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் அடைமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதுபோல தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையோரம் உள்ள வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6வது நாளாக அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் மேலும் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை பெய்யும் என்றும் பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது போல புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.