Publish Date: Mon, 20 Oct 2008 (11:29 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (11:28 IST)
'
காதலிக்கநேரமில்லை' உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் சென்னையில் இன்று காலமானார்.
கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்ரீதரின் உடல்நிலை நேற்று மோசமானது. உடனடியாக அவர் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. அவரது உடல் நீலாங்கரை சாலையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.
இயக்குனர் ஸ்ரீதருக்கு தேவசேனா என்ற மனைவியும், ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மறைவுக்கு தமிழ் திரையும் இரங்கல் தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் புதுமையான படங்களை இயக்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராணக் கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு.
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, உரிமைக் குரல், மீனவ நண்பன், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார் ஸ்ரீதர்.