சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்நாடு பாழாகும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அ.தி.மு.க, இன்று இந்த திட்டத்தை தடுத்தே தீருவேன் என்று சொல்லும் அவர்களை மக்கள் வைக்க வேண்டிய இடத்திலே வைப்பதோடு, அவர்களை ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை விமான நிலையம் எதிரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, தமிழகத்திலே இன்றைக்கு பாறையாக இருக்கின்ற இடத்தை எல்லாம் சோலைவனமாக ஆக்குவதற்காக, வணிக பூமியாக ஆக்குவதற்காக, அயல்நாட்டு வாணிபங்கள் விரிவடைவதற்காக, அதற்காகத்தான் தமிழகத்தின் வளத்தை பெருக்குவதற்காகத்தான் சேது சமுத்திரத் திட்டம்.
இந்தத் திட்டத்தை தடுக்க சில பேர் இன்றைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பாக பக்கத்திலே இருக்கின்ற ஒரு அரசு, ஒரு நாட்டின் அரசு நாம் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதை விரும்பவில்லை. ஏனென்றால், இந்தத் திட்டத்தை தமிழகத்திலே நிறைவேற்றினால் தமிழகம் மேலும் வளம் பொருந்தியதாக ஆகிவிடும், மேலும் பலம் பொருந்தியதாக ஆகி விடும். தமிழகம் பலம் பொருந்துவதும், வளம் சிறப்பதும் தனக்குப் பிடிக்காத ஒன்று என்பதால் அவர்கள், சிங்களவர்கள் சில பேர் தமிழகத்திலே இருக்கிற சில பேரை வளைத்துப் போட்டு ஏற்கனவே எவ்வளவு சீக்கிரமாக இந்தத் திட்டம் வேண்டுமென்று சொன்னார்களோ, அவர்கள் எல்லாம் இந்தத் திட்டத்தை இன்றைக்கு எதிர்த்துப் பேசுகிறார்கள்.
கடந்த கால தேர்தல் அறிக்கையை எடுத்துப் படித்துப் பார்த்தீர்களேயானால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாக சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அது சிறந்த திட்டம், அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்நாடு பாழாகும். எப்படியும் இதை நிறைவேற்றியே தீருவேன் என்று சபதம் செய்தவர்கள், இப்போது என்ன சொல்கிறார்கள்? அந்தத் திட்டத்தை எப்படியும் நான் தடுத்தே தீருவேன் என்று சொல்கிறார்கள் என்றால், என்ன தாராளமான மனப்பான்மை? என்ன தமிழ் உணர்வு? என்ன நாட்டைப் பற்றிய நல்ல எண்ணம்? எவ்வளவு அதி அற்புதமான சிந்தனை?.
எண்ணிப் பார்க்கின்ற மக்களின் எண்ணிக்கை இன்றைக்கு தமிழ்நாட்டிலே குறைந்து வருகின்ற காரணத்தால் எவரும் எதையும் பேசலாம் என்றாகிவிட்டது. அப்படி ஆகிவிட்ட காரணத்தினாலே தான் இந்தத் திட்டங்களைப் பற்றி நாம் பேசும்போது, அந்தத் திட்டங்களிலே தங்களுக்கு உள்ள வெறுப்பை காட்டி, அதைத் தடுத்தே தீர வேண்டும் என்று உச்சகட்டத்திற்குச் செல்கிற சில தலைவர்களை நாம் பார்க்கிறோம். அவர்களை நீங்கள் வைக்க வேண்டிய இடத்திலே வைக்க வேண்டும். அவர்களை நீங்கள் ஒதுக்க வேண்டிய இடத்திற்கு ஒதுக்க வேண்டும். அவர்களை நீங்கள் போட வேண்டிய இடத்திலே போட வேண்டும் என்று கருணாநிதி பேசினார்.