அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனும், சில நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ராமநாதபுரத்தில் தலா 8 செ.மீ மழையும், தாம்பரத்தில் 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
ஸ்ரீபெரும்புத்தூர், காரைக்கால், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும், சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், செங்குன்றம், நாகபட்டினம், அம்பாசமுத்திரம், சோழவந்தான் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
செய்யூர், உத்திரமேரூர், சோழவரம், செம்பரம்பாக்கம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாதோப்பு, நன்னிலம், திருவாரூர், சீர்காழி, கடலாடி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.