Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்தவர் ஜெயலலிதா: கருணாநிதி!

தனது பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்தவர் ஜெயலலிதா: கருணாநிதி!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (15:41 IST)
''தன்னுடைய பிறந்த நாளுக்காக தானே ஆணை பிறப்பித்து சிறைக்கைதிகளை விடுதலை செய்த ஜெயல‌‌லிதா, தற்போது அண்ணாவின் நூற்றாண்டு விழாவிற்காக புதிய சலுகையாக ஏழு ஆண்டு காலம் சிறையிலே இருந்த கைதிகளை விடுதலை செ‌ய்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஜனநாயகமே பின் நோக்கிச் சென்று விட்டதாகப் புலம்பியிருக்கிறார்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் பேரறிஞர் அண்ணா‌வி‌ன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏழு ஆண்டுகள் சிறைவாசம் முடித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது குறித்து அது ஏதோ ஒரு பெரிய வன்முறைக்கு வித்திடுவதற்காக செய்யப்பட்ட காரியம் என்று ஒரு மாதம் கழித்து அவரது கருத்தை வெளியிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட 1405 ஆயுள் தண்டனைக் கைதிகளின் துணையோடு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக செய்யப்படும் முயற்சி என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா‌‌வி‌ன் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 1405 கைதிகளை விடுவித்தது குறித்து நான் 17-9-2008 அன்றே விவரமாக பதில் எழுதி விட்டேன். அந்தப் பதிலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அம்மையார் வாய் திறக்காமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று அந்தப் பிரச்சனையைக் கிளப்பியிருக்கின்றார்.

புகழ் பெற்ற மறைந்த தலைவர்களின் பிறந்த நாளையொட்டியோ அல்லது சில முக்கிய நிகழ்வுகளையொட்டியோ சிறையிலே நீண்ட காலம் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது என்பது ஜெயலலிதாவும், அவரோடு கூட்டணி வைக்கத் துடிப்போரும் சொல்வது போல ஏதோ தி.மு.க ஆட்சியில் புதிதாகச் செய்யப்படும் காரியமல்ல.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் - யாருமே செய்யாத காரியமாக ஜெயலலிதா, தான் முதலமைச்சராக இருந்த போது, தன்னுடைய பிறந்த நாளையொட்டியே 1992ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியிலே 24-2-1992 அன்று பிறப்பித்த அரசாணையில், 12 ஆண்டுகள் சிறையிலே இருந்த ஆண் ஆயுள் தண்டனை கைதிகளையும், பத்தாண்டுகள் சிறையிலே இருந்த பெண் ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டு, அதன்படி தமிழகத்தில் 230 பேர் சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த ஆண்டு ஜெயலலிதா பேரறிஞர் அண்ணா‌வி‌ன் பிறந்த நாளுக்காக எந்த சிறைக்கைதிகளையும் விடுதலை செய்யவில்லை. அம்மையார் பிறந்த நாளை விட அண்ணா பிறந்த நாள் முக்கியமா; என்ன!

அதற்கடுத்த ஆண்டு, 1993-ல், 24-2-1993 அன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே பிறப்பிக்கப்பட்ட அரசாணைபடி, 132 சிறைக் கைதிகளை விடுதலை செய்திட உத்தரவிட்டு, அவ்வாறே விடுவிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டும் அண்ணா பிறந்த நாளுக்காக சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.

பாவ‌ம் அ‌ண்ணா!

1994-ல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே, 24-2-1994 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி 163 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டு, அவ்வாறே விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஆண்டும் அண்ணா பிறந்த நாளுக்காக யாரும் விடுதலை செய்யப்படவில்லை. பாவம்; அண்ணா!

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளுக்காக தானே ஆணை பிறப்பித்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தவர் தான், தற்போது பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவிற்காக புதிய சலுகையாக ஏழு ஆண்டு காலம் சிறையிலே இருந்த கைதிகளையும் விடுதலை செய்ய இந்த அரசு முன் வந்து ஆணை பிறப்பித்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அண்ணாவின் வாசகங்களை எடுத்து தன் அறிக்கையிலே முதல் பாராவிலே குறிப்பிட்டு ஜனநாயகமே பின் நோக்கிச் சென்று விட்டதாகப் புலம்பியிருக்கிறார்.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரை இது உண்மையிலே அண்ணாவின் கனவுகளை நனவாக்குவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு. கட்சியில் மட்டும் அண்ணாவின் பெயரைப் பயன்படுத்துவது நாமல்ல. மேலும் அண்ணாவின் பிறந்த நாளுக்காக இந்த ஆண்டு மட்டும் சிறைக்கைதிகளை விடுவித்திடவில்லை. தி.மு.க ஆட்சிப் பொறுப்பிலே இருந்த 1996ஆம் ஆண்டு 370 பேரையும் - 1998ஆம் ஆண்டு 107 பேரையும் - 1999ஆம் ஆண்டு 110 பேரையும் - 2000ஆம் ஆண்டு 89 பேரையும் பத்தாண்டு காலம் வரை சிறையிலே இருந்த ஆயு‌ள் கைதிகளை அண்ணாவின் பிறந்த நாளையொட்டி விடுதலை செய்தோம்.

2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், 2001ஆம் ஆண்டினைத் தவிர்த்து 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை அண்ணாவின் பிறந்த நாளையொட்டி எந்தச் சிறைக்கைதிகளையும் அவர் விடுதலை செய்யவே இல்லை. 2006ஆம் ஆண்டு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகுதான் அந்த ஆண்டில் 472 பேரையும் - 2007ஆம் ஆண்டு 190 பேரையும் பத்தாண்டு காலம் சிறையிலே ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்தவர்களை விடுதலை செய்தது. இந்த ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு என்பதால், இந்த ஆண்டினை ஒரு தனிச் சிறப்பு நேர்வாகக் கொண்டு, ஏழு ஆண்டு காலம் சிறையிலே இருந்த ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய முன் வந்து விடுதலை செய்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், ஜெயலலிதா ஒரு மாதம் கழித்து அறிக்கை விடுத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஒரு முடிவெடுத்து விடுதலை செய்யும் போது, அப்படி விடுதலை செய்யப்படுபவர்களில் யார் யார் எந்தக் கட்சி என்று பார்த்து விடுதலை செய்திட முடியுமா? அதிலே ஓரிருவர் தி.மு.க என்பதால் அவர்களை விடுதலை செய்யாமல் அவர்கள் மட்டும் சிறையிலே இருக்க வேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்ய முடியுமா? ஒருவர் ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவருக்காக தனி விதிமுறை கொண்டு வந்து அவர் மட்டும் சிறையிலே இருக்க வேண்டுமென்றா கூற முடியும்? சிறைக்கைதிகளை இது போன்ற முக்கிய நிகழ்வுகளில் விடுதலை செய்வது என்பது இந்த ஆண்டு தான் கொண்டு வரப்பட்டதா? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவருடைய பிறந்த நாளுக்காக விடுதலை செய்யப்பட்டவர்களில் யாருமே அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லையா? விடுதலை செய்யப்படுபவர்கள் எந்தக்கட்சி என்றெல்லாம் பார்த்தா அப்போது விடுதலை செய்யப்பட்டது ஏன்? கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் இது போல் விடுதலை செய்யப்பட்டதே கிடையாதா? இன்னும் சொல்லப்போனால் கேரள மாநிலத்தில் தோழர் ஈ.எம்.எஸ். முதலமைச்சராக இருந்த போது தான் 1957ஆம் ஆண்டு ஏழாண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்தார்.

கோட்சேயை விடுதலை செ‌ய்தது மரா‌ட்‌டிய கா‌ங்‌கிர‌ஸ் அரசு!

ஆயுள் தண்டனை என்றாலே ஆயுட்காலச் சிறை தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டதாக ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. உண்மை தான். 1964இல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இவ்வாறு கூறியது. அந்த வழக்கைத் தொடர்ந்தவர் யார் தெரியுமா? கோபால் விநாயக் கோட்சே. இவர் மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். ஆனால் அரசு இவரை ஆயுள் முழுக்க சிறையில் அடைத்து வைக்கவில்லை. 1965ஆம் ஆண்டு அக்டோபரில் மராட்டிய காங்கிரஸ் அரசு அவரை விடுதலை செய்தது.

1977ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை - பல கொலைகள், குண்டு வெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஒரே மூச்சில் விடுதலை செய்தது. அவர்களில் நக்சலைட்டுகள், மார்க்சிஸ்டுகள், பயங்கரவாதிகள், குண்டர்கள் அனைவரும் அடக்கம் என்று பொதுவுடைமைச் சிந்தனையாளரும் எழுத்தாளருமான தியாகு ஒரு கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தியாகு அவர்களே ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 1974ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியிலே சிறையிலே இருந்த போது, அந்தத் தண்டனையில் மாற்றம் கோரி, முன்னாள் மேயர் கிருஷ்ணமூர்த்தியு‌ம், அருமை நண்பர் க.சுப்புவும் முதலமைச்சராக இருந்த என்னை வந்து சந்தித்த போது, அவர் எந்தக் கட்சியின் ஆதரவாளர் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. 1974ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் அவரது தண்டனையான தூக்குத்தண்டனையிலிருந்து மனிதாபிமான கண்ணோட்டத்தோடு மாற்றம் செய்தவன் தான் நான் என்பதை அந்தக் காலத்து நண்பர்களும், உண்மையான கம்யூனிச சிந்தனை கொண்டவர்களும் மறக்க மாட்டார்கள்.

போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்!

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டினையொட்டி 1405 பேர்களை விடுதலை செய்தது குறித்து ஜெயலலிதா போன்றவர்கள் வெறுப்பைக் கக்கிய போதிலும், எழுத்தாளர் தியாகு "கலைஞருக்கு சிறைத் தமிழனின் நன்றி'' என்ற தலைப்பில் "நக்கீரன்'' 24-9-2008 தேதிய இதழில் எழுதிய கட்டுரையில் "அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு 1405 சிறைப் பறவைகளைக் கூண்டு திறந்து சுதந்திர வானில் பறக்க விட்டுள்ளார் தமிழக முதல்வர் கலைஞர். தூக்குத் தண்டனை கைதியாகவும், ஆயுள் தண்டனைக் கைதியாகவும் பதினைந்து ஆண்டுக்கு மேல் சிறைப்பட்டிருந்தவன் என்ற முறையிலும், சிறைப்பட்டோரின் நல உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறவன் என்ற முறையிலும் கலைஞரின் இந்தச் சாதனையை உளமாறப் பாராட்டுகிறேன். போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும், கலைஞரே, உங்கள் மனித நேய அணுகுமுறை தொடரட்டும். கலைஞரே, நீங்கள் செய்திருப்பது நன்று. சிறைத் தமிழர்களின் நன்றி. 1405 குடும்பங்கள் இழந்த ஒளியை மீட்டுக் கொடுத்தீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ள வாசகங்கள் நெஞ்சுக்கு ஆறுதல் தரக்கூடியவை என்பதால், இவற்றை நினைத்து, அம்மையாரின் அறிக்கையை அலட்சியம் செய்வோம். என்ன இருந்தாலும் "தியாகுவின் நெஞ்சம்'' தீயோர்க்கு அமையுமா?'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil