ஈழத் தமிழினத்தை பாதுகாக்கும் உணர்வோடு வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க கூட்டமைப்பு வரும் 17ஆம் தேதி நடத்தும் கடையடைப்பு போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினமே உரத்து குரலெழுப்பி வருகிறது. எனினும் தமிழினத்தின் அவலக் குரல் இந்திய பேரரசின் செவிகளுக்கு எட்டவில்லை எனும் நிலை வேதனையளிக்கிறது.
இந்திய அரசின் போக்கை தடுக்கவும், அதே வேளையில் தமிழ் இனத்திற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தவும் தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே குரலெழுப்பி வருவது ஆறுதல் அளிக்கிறது.
அத்துடன், இது தொடர்பாக ஒட்டுமொத்த தமிழர்களும் ஒருமித்த முடிவை மேற்கொள்ளும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி 14ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதென அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியதாகும்.
வாழ்வா-சாவா என்னும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழத் தமிழினத்தை பாதுகாக்கும் உணர்வோடு த.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க கூட்டமைப்பு எதிர்வரும் 17ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் கடையடைப்பு அறப்போர் நடத்த அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும். வணிக பெருமக்களின் தமிழ்மான உணர்வை விடுதலைச்சிறுத்தைகள் மனதார வரவேற்று பாராட்டுகிறது.
அத்துடன், ராஜபக்சேவின் உருவ பொம்மைகளை எரிக்கும் அறப்போரிலும் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஈடுபட்டு தனது எதிர்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.