தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
, ஞாயிறு, 12 அக்டோபர் 2008 (15:30 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், வங்கக் கடலில் இலங்கை கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று கூறினார்.