ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்ததன் காரணமாக, தமிழக மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானாலும், தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுமானாலும், அதற்கான முழுப் பொறுப்பும் தி.மு.க. அரசையே சாரும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாற்றியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்டு சிறைவாசம் முடித்துள்ளவர்கள் உட்பட, மொத்தம் 1,405 ஆயுள் தண்டனைக் கைதிகளை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக, மிகப் பெரிய தேசத்தலைவர்களின் பிறந்த நாட்களின் போது, சாதாரண குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையிலும், அவர்களுடைய நன்னடத்தையைக் கருத்தில் கொண்டும் விடுவிப்பது நடைமுறையில் உள்ள ஒன்று.
மிகப் பெரிய குற்றங்களைச் செய்துவிட்டு ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை ஒட்டு மொத்தமாக விடுதலை செய்வது என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று. ஆயுள் தண்டனை என்றால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் என்ற நடை முறை பின்பற்றப்பட்டு வந்தாலும், அண்மையில் உச்ச நீதிமன்றம், ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் என்று மிகத் தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது.
ஒரு குற்றத்திற்கு மரண தண்டனையும் ஒன்று, என்று குறிப்பிடப்பட்டு அதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலோ, அல்லது மரணதண் டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனையை குற்றவியல் நடை முறைச் சட்டம் 433-ன் படி ஆயுள் தண்டனையாக குறைத்தாலோ, அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் 14 வருடங்கள் தண்டனையை அனுபவிக்காமல் விடுதலை செய்யப்படக்கூடாது என்று குற்றவியல் நடைமுறைச்சட்டம் 433ஏ-இல் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை அம்மாநில அரசு இரண்டரை ஆண்டுகளில் விடுதலை செய்தபோது, உள் நோக்கத்துடனோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ, அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவோ, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று தெரிவித்து, அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு உத்தரவிட்டது.
சட்டத்தைப் பற்றியும் கவலைப்படாமல், நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லீலாவதி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தி.மு.க-வைச் சேர்ந்த குற்றவாளி களையும், தி.மு.க-வைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது, உள்நோக்கம் கொண்டது மட்டுமல்லாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல்.
இது போன்று ஒட்டு மொத்தமாக ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை, அ.இ.அ.தி.மு.க. சார்பில் கடுமையாக எதிர்ப்பதோடு, ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்ததன் காரணமாக, தமிழக மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமானாலும், தமிழக மக்களின் ஜன நாயக உரிமைகள் பறிக்கப்படுமானாலும், அதற்கான முழுப் பொறுப்பும் தி.மு.க. அரசை சாரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.