நெல்லை மாநகர மக்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்ற மின்சார வெட்டிற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து வரும் 14ஆம் தேதி அ.இ.அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்சார வெட்டின் காரணமாக, திருநெல்வேலி மாநகரத்தில் ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்சார வெட்டு நடைமுறையில் உள்ளது. இதன் விளைவாக, ஊனமுற்றோர்கள் நிர்வகித்து வரும் தொலைபேசி சாவடிகள், நகலகக் கடைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அரிசி ஆலைகள், தொழிற்சாலைகள், லேத் பட்டறைகள், மரக்கடைகள் ஆகியவை இயங்க முடியவில்லை. இதன் காரணமாக இங்கு பணிபுரிபவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். மின்சார வெட்டு காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எக்ஸ்ரே எடுப்பது, ஸ்கேன் எடுப்பது, போன்ற பணிகள் மாதத்திற்கு ஒருமுறை தான் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு விட்டதால், மின்சார வெட்டின் காரணமாக பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் முதலானவற்றை குறித்த நேரத்தில் பெற முடியாமல் ஏழை, எளிய பெற்றோர்களும், மாணவ- மாணவியரும் அவதிப்படுகின்றனர்.
வீட்டில் இருந்து சுய தொழில் செய்து பிழைக்கும் ஏழை, எளிய பெண்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு காரணமாக ஆலை நிர்வாகம் தனது தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தியுள்ளது. தற்போது அவர்கள் ஒரு வேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர மக்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்ற மின்சார வெட்டிற்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடல் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.